Friday, July 18, 2014

கீதை - 10.39 - அனைத்தின் விதை நான்

  கீதை - 10.39 - அனைத்தின் விதை நான் 


यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन ।
न तदस्ति विना यत्स्यान्मया भूतं चराचरम् ॥१०- ३९॥

யச்சாபி ஸர்வபூ⁴தாநாம் பீ³ஜம் தத³ஹமர்ஜுந |
ந தத³ஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூ⁴தம் சராசரம் || 10- 39||

யச் = அவைகள்
ச அபி= மேலும்
ஸர்வபூ⁴தாநாம் = அனைத்து உயிர்களும்
பீ³ஜம் = விதை, மூலம்
தத = அது
அஹம் = நான்
அர்ஜுந = அர்ஜுனா
ந = இல்லை
தத்  = அது
அஸ்தி = விளங்குகின்றது
விநா = இல்லாமல்
யத் = அவைகள்
ஸ்யாத் = இருக்கும் 
மயா = என்னால்
பூ⁴தம் = உலகில்
சராசரம் = அசைபவையும், அசையாமல் இருப்பவையும்

அனைத்து உயிர்களிலும் விதை  நான். சராசரங்களில் எனையன்றி வேறு எதுவும் இல்லை. 

இந்த இரண்டு வரியின் அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

அனைத்து உயிர்களிலும் விதை  நான்.

இந்த உயிர்கள் எல்லாம் இறையின் வெளிப்பாடு என்றால் எப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது ?  நல்லவனும்,கெட்டவனும், அறிஞனும், மூடனும், எல்லாம் ஒன்றின் வெளிப்பாடு என்று எப்படி கொள்வது?

ஒன்றில் இருந்து மற்றது தோன்றியது என்றால், தோன்றியதற்கும், தோற்றுவித்ததற்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் அல்லவா ?

நம்மை சுற்றிப் பார்த்தால் அப்படி ஒரு தொடர்பு இருபதாகத் தெரியவில்லை.

நல்லதும் கெட்டதும் விரவிக் கிடக்கிறது.  இரண்டும் ஒன்றில் இருந்து வந்தது என்று அறிவு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இறைவன் நம்மை தோற்றுவித்தானா ? அவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன ? அவன் நம்மை தோற்றுவித்தவன் என்றால் தோற்றுவித்த பின் அவன் என்ன ஆனான் ? நாம் இறந்த பிறகு நமக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு என்ன ?

இந்த கேள்விகள் அனைத்துக்கும் இந்த இரண்டு வரியில் விடை தருகிறார் வியாசர்.

அனைத்து உயிர்களுக்கும் விதை நான்.

விதையில் இருந்து மரம் வருகிறது. மரம் வந்த பின் விதை என்னவாகிறது ? விதைதான் மரமாக மாறியது.  மரத்தில் இருந்து மீண்டும் விதை வரும். ஒரு விதையில் இருந்து ஒரு மரம் வரும். ஒரு மரத்தில் இருந்து பல விதைகள் வரும். பல விதைகளில் இருந்து பல மரங்கள் வரும்.

ஒரு மாந்தோப்பில் எத்தனையோ மரங்களைப் பார்க்கிறோம். இவை அனைத்தும் ஒரு விதையில் இருந்து வந்தது என்று நம்மால் கற்பனை செய்து பார்க்க  முடியும். வந்தும் இருக்கலாம்.

இப்படி எத்தனையோ உயிர்களைப் பார்க்கும் போது அவை அனைத்தும் ஒன்றில் இருந்து வந்தது என்று நினைப்பது கடினமா ?

சரி, விதையில் இருந்து மரம் வரும்.

மரம் விதையில் இருந்து மட்டும்தான் வருமா , வேறு ஏதாவதில் இருந்தும் மரம் வருமா ?

"இந்த உலகில் என்னை அன்றி வேறு எதுவும் இல்லை "

அவனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

  


No comments:

Post a Comment