கீதை - 10.21 - நான் விஷ்ணு, சூரியன்,மரீசி, சந்திரன்
आदित्यानामहं विष्णुर्ज्योतिषां रविरंशुमान् ।
मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशी ॥१०- २१॥
ஆதி³த்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸு²மாந் |
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸ²ஸீ² || 10- 21||
ஆதி³த்யாநாம் விஷ்ணு = ஆதித்யர்களில் நான் விஷ்ணுவாக இருக்கிறேன்
ஜ்யோதிஷாம் அம்ஸு²மாந் ரவி: = ஒளிகளில் நான் கதிர் வீசும் சூரியனாக இருக்கிறேன்
மருதாம் மரீசி: = வாயுவில் நான் மரீசி
நக்ஷத்ராணாம் அஹம் ஸ²ஸீ² அஹம் அஸ்மி = நட்சத்திரங்களில் நான் சந்திரனாக இருக்கிறேன்
ஆதித்யர்களில் விஷ்ணுவாகவும், ஒளிகளில் சூரியனாகவும் ; காற்றுகளில் மரீசியாகவும் ; நக்ஷத்திரங்களில் சந்திரனாகவும் இருக்கிறேன்.
ஒன்றை நாம் எப்படி அறிந்து கொள்கிறோம் ?
ஆறு பொறிகளால் அறிந்து கொள்கிறோம்.
அது என்ன ஆறு ? ஐந்து தானே இருக்கிறது ?
ஐந்து புலன்கள். ஆறாவது மனது.
புலன்களால் அறிய முடியாததை மனதால் சிந்தித்து அறிகிறோம்.
எப்படி ?
குழந்தை புலியைப் பார்த்தது இல்லை.புலி என்றால் என்ன ? அது எப்படி எப்படி இருக்கும் என்று கேட்க்கிறது.
"புலி , பூனை மாதிரி இருக்கும். ஆனா கொஞ்சம் பெரிசா இருக்கும் " என்று அறிந்ததில் இருந்து அறியாததைப் புரிய வைக்கிறோம்.
குழந்தை இன்னும் புலியை நேராக பார்க்கவில்லை.ஆனாலும் புரிந்து கொள்கிறது.
இது புலன்கள் மூலம் இல்லை, அறிவின் மூலம் அறிந்து கொள்வது.
அது போல இறை என்பதை எப்படி அறிந்து கொள்வது ?
தெரிந்ததை வைத்து தெரியாத ஒன்றை சொல்லித் தருகிறார் வியாசர்.
அடுத்து வரும் 22 சுலோகங்களில் 75 உதாரணங்கள் தருகிறார்.
ஒவ்வொன்றிலும் மிகச் சிறப்பானது நான் என்கிறான் கண்ணன்.
இறை நிலை என்பது எதிலும் ஒரு உயர்ந்த நிலை என்ற வகையில் அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இறை என்பது எதிலும் உன்னதமான நிலை.
இறைவனை அடைவது என்றால் நீங்கள் எடுத்துக் கொண்ட செயலில் மிகச் சிறப்பான நிலையை அடைவது. இதற்கு மேல் இல்லை என்ற நிலையை அடைவது.
அது படிப்பாக இருக்கட்டும்,அலுவலக வேலையாக இருக்கட்டும், வீட்டு வேலையாக இருக்கட்டும், எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
தவம் செய்வது என்றால் ஏதோ காட்டுக்குள் போய் கரையான் புற்று மேலே வர உண்ணாமல் உறங்காமல் மந்திரம் ஜெபிப்பது அல்ல.
எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக மிக சிறப்பாக செய்வது தவம்.
அப்படி (தவம்) செய்பவர்கள் இறை நிலையை அடைவார்கள்.
ப்ரமாதமான கீதை தொகுப்பு !! ஏதோ தேடப்போய் இந்த பக்கம் கிடைத்தது !!
ReplyDelete